துபாய்:
மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நண்பரின் தாயார் துருக்கி செல்லும் வழியில் விமானத்தில் எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, துபாயில் உள்ள கனடியன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, துபாய் டெர்மினல் 3 விமான சேவை மூலம் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, துபாயில் உள்ள Canadian Hospital மருத்துவமனையின் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், துரதிர்ஷ்டவசமாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்ததும், அவரது குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் நண்பர்கள் ஈமான் கலாச்சார சேவை மையத்தின் பொதுச் செயலாளர் திரு. ஹமீது யாசின் அவர்களை அதிகாலை தொடர்பு கொண்டு, உயிரிழந்தவரின் உடலை மலேசியாவுக்கு அனுப்பி வைக்க தேவையான உதவிகளை கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, ஈமான் கலாச்சார சேவை மையத்தின் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான ஏற்பாடுகளை துரிதமாக செய்தனர். இதன் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குள் உயிரிழந்தவரின் உடல் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பணியில் HOPE Organization, Dubai அமைப்பின் நிறுவனர் கௌசர் பெய்க் (Kauser Baig) மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர் நியாஸ் (Niyaz) ஆகியோர் முழு உழைப்புடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சார்பிலும், நண்பர்கள் சார்பிலும் ஈமான் கலாச்சார சேவை மையத்தின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், HOPE Organization நிறுவனர் கௌசர் பெய்க், ஈமான் கலாச்சார சேவை மைய நிர்வாக உறுப்பினர் பீர் மொஹைதீன், HOPE Organization நிர்வாக உறுப்பினர் நியாஸ், நெல்லை லாலா ஸ்வீட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாமி நாதன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வரும் சல்வா இசைக்குழுவின் தலைவர் பகவதி ரவி அவர்களும், இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு, உயிரிழந்த தமிழரின் உடலை மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக குரல் தொலைக்காட்சி மற்றும் தமிழக குரல் நாளிதழ் சார்பிலும் பகவதி ரவி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் எதிர்பாராத சூழ்நிலைகளில் உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக வழங்கி, உடலை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் சமூக அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு முக்கிய பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment